உக்ரைன் நாட்டின் மீது ரஷிய நாட்டின் ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி கடந்த 7 மாதங்களுக்கு மேலாக போர் தாக்குதல் நடத்தி வருகின்றது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால் இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியாகி இருப்பதுடன் பல லட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறி அகதிகளாகியுள்ளனர். கொரொனாவுக்கு பின்னான பொருளாதார மீட்பை மேலும் அதலபாதாளத்துக்கு தள்ளும் விதமாக போர் காரணமாக உலக அளவில் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல், பொருளாதாரம், கல்வி, மருத்துவம், நாடுகளுக்கு இடையான நட்புறவு, மனித மான்பு போன்ற எல்லா கூறுகளும் கேள்விக்குறியாகியுள்ளது. இதையடுத்து, போரை நிறுத்த நடத்தப்பட்ட பல கட்டப் பேச்சுவார்த்தையும் பலனளிக்கவில்லை. இந்த நிலையில், தற்போது உக்ரைனிடமிருந்து கைப்பற்றிய 4 நகரங்களை ரஷிய தனது நாட்டுடன் இணைத்து அறிவித்துள்ளது. இதற்கிடையே ஐ.நா.வில் உக்ரைன் – ரஷியா போர் தொடர்பாக நடந்த அனைத்து வாக்கெடுப்பையும் நடுநிலை வகித்து வரும் இந்தியா புறக்கணித்துள்ளது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, “ரஷியா-உக்ரைன் போரில் அணுசக்தி நிலையங்களுக்கு ஆபத்து ஏற்படுவது சுற்றுச்சூழலுக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். போரை நிறுத்துவதற்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது, தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை தொடங்குவது அவசியம்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக பதிலளித்துள்ள ஜெலன்ஸ்கி, உக்ரைனின் நான்கு நகரங்களை சட்டவிரோதமாக ரஷியா இணைத்துள்ள சூழலில், ரஷியாவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த உக்ரைன் தயாராக இல்லை என்று பதிலளித்துள்ளார். மேலும், உக்ரைனுக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவுக்கு ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.