சென்னை: தமிழக அமைச்சராகப் பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடவே சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறையை அமைச்சர் மெய்யநாதனும், சிறப்பு திட்ட அமலாக்க துறையை முதல்வர் மு.க.ஸ்டாலினும் கவனித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் மாளிகையில் சரியாக 9.30 மணிக்கு தொடங்கிய விழாவில் முதலில் தேசிய கீதமும், பின்னர் தமிழ்த் தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. பின்னர் உதயநிதிக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழியில் அமைச்சர் உதயநிதி கையெழுத்திட்டார்.
தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமை செயலகத்தில் தனது இருக்கையில் அமர்ந்து அதிகாரப்பூர்வமாக அலுவலக பொறுப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். அமைச்சராக பொறுப்பேற்ற பின் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் கோப்பைக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்து தனது முதல் கோப்பில் கையெழுத்திட்டார். பின்னர், வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்கள் 9 பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்க கையெழுத்திட்டார். இதற்கிடையே, மூத்த அமைச்சர்கள் புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.