அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தில் விக்னேஷ் (24) என்பவர் ஐபிஎல் போட்டியின் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகராகவும், அதே ஊரைச் சேர்ந்த தர்மராஜ் (21) விராட் கோலி இடம்பெற்று இருக்கும் ஆர்சிபி அணியின் ரசிகராகவும் இருந்துள்ளனர். இந்த நிலையில், இருவரும் மது போதையில் இருக்கும்போது, தங்களுக்கு விருப்பமான ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் குறித்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, விக்னேஷ் ஆர்சிபி அணியையும் விராட் கோலியையும் கேலி செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த தர்மராஜ் மது பாட்டிலாலும் கிரிக்கெட் மட்டையாலும் விக்னேஷ் மண்டையில் அடித்துள்ளார். இதனால், விக்கேஷ் உயிரிழந்துள்ளார். காவல்துறை தர்மராஜை கைது செய்துள்ளது. இதையடுத்து, விராட் கோலியின் ஆக்ரோஷம்தான் ரசிகர்களும் இப்படி இருக்க காரணம் என ட்விட்டரில் விராட் கோலியை கைது செய்யுங்கள் (Arrest Virat kohli) என்ற ட்விட் வைரலாகி வருகிறது. இதுபோன்ற ஹாஷ்டேக் வைரலுக்கு ரோஹித் சர்மாவையும் அவரது ரசிகர்களையும் விராட் கோலி ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.