சென்னை: மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் 2011-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, 2019-ம் ஆண்டு வரை சுமார் 48 லட்சம் மாணவ,மாணவிகளுக்கு இலவசமடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று பரவலால் மடிக்கணினி கொள்முதலில் சிக்கல் ஏற்பட்டது.
இதன்காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதனிடையே, மடிக்கணினிக்கு பதிலாக கையடக்ககணினி (டேப்லெட்) வழங்குவதற்கு தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரம் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை கைவிடவில்லை. சர்வதேச மந்தநிலை காரணமாக கொள்முதலில் தாமதம் நிலவுகிறது. அந்த பணிகள் முடிந்தவுடன் மாணவர்களுக்கு மடிக்கணினி விநியோகிக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 15 விதமான இலவச நலத்திட்டங்கள், பொருட்களின் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் பட்டியலில் வழக்கமாக இடம்பெறும் இலவச மடிக்கணினி நடப்பாண்டு இடம்பெறவில்லை.மேலும், டேப்லெட் குறித்த தகவலும் இடம் பெறாதது சர்ச்சையாகியுள்ளது.