கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உரிய ஆதாரங்களை வெளியிட்டு தமிழக காவல்துறையின் அறிக்கைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய உளவுப்பிரிவு அனுப்பிய சுற்றறிக்கையில், கோவை மாநகரம் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை என்று தமிழக காவல்துறை குறிப்பிட்டுள்ளது முற்றிலும் பொய். கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும். மத்திய உளவுத்துறை குறிப்பிடப்பட்டுள்ளதை காவல்துறையால் மறுக்க முடியுமா? கடந்த அக்டோபர் 23ஆம் தேதிக்கு முன்னரே ஜமேஷா முபீன் பற்றிய தகவல்களை காவல்துறை தலைமை மற்றும் உள்துறைக்கு காவல்துறையில் இயங்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கி உள்ளது. இந்த ஆண்டு ஜூலை 19ஆம் தேதி மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் அதன் பிறகும் ஜமேஷா முபினை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வராமல் கோட்டை விட்டது தமிழக காவல்துறையின் உளவுத்துறை. கோவை கார் வெடிப்பு சம்பவம் அரங்கேறியதற்கு காரணம் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் டிஜிபி சைலேந்திரபாபுவும் தான். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தமிழகத்தில் நிகழாமல் இருக்க, உடனே சமரசமின்றி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.