தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி, கோவையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், கோவை கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி நடந்த கோவை பகுதியில் போட்டி தொடங்குவதற்கு முன் கனமழை பெய்ததால், போட்டி 2 மணி நேரம் காலதாமதமாகவே தொடங்கப்பட்டது. இதனால், போட்டிக்கான ஓவர்களும் 17ஆக குறைக்கப்பட்டது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறிக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழையினால் 4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டதால் கோப்பை சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் அணிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.