இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுடன் முதலில், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்த நிலையில், மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. இதில், முதல் ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவும், 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை 20 ஓவர் கிரிக்கெட் தொடரை இழந்ததால் ஒரு நாள் போட்டி கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ளனர். இந்திய அணி டி20 தொடரை வென்றதுபோல் இந்த தொடரையும் வெல்ல வேண்டும் என்ற ஆவலுடன் வீரர்கள் உள்ளனர். இந்த போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.