அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு யாரெல்லாம் போட்டியிட முடியும் என்பது குறித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, நிரந்தர பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த பிறகு உருவாக்கப்பட்ட ஒருகிணைப்பாளர், இணை ஒருகிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை உள்ளிட்ட பதவிகள் நீக்கப்பட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன், புதிதாக துணை பொதுச்செயலாளர் என்ற பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பொதுச்செயலாளர் பதவிக்கு 4 மாதங்களில் தேர்தல் நடைப்பெற இருப்பதாகவும் பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார். பொதுச்செயலாளர் தேர்தலில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும். தலைமைக் கழக பொறுப்புகளில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவரை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். மாவட்ட செயலாளார்கள் ஒரு வேட்பாளரை மட்டுமே முன்மொழிய, வழிமொழிய முடியும். இதுபோன்ற தகுதிகளை கொண்ட ஒரு நபராலேயே அதிமுக பொதுச்செயலாளராக போட்டியிட முடியும். அதேபோல, துணைப் பொதுச்செயலாளரை பொதுச்செயலாளர் மட்டுமே நியமிக்க முடியும் என்று இன்றைய பொதுக்குழுவில் அதிமுகவின் தலைமை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.