மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதன்படி, ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, முதலாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது போட்டி, செயிண்ட்கட்சியில் உள்ள பாசட்டரேவில் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் நிகோலஸ் பூரன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, விளையாடிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து 3வது ஓவரில் முதல் பந்தில் சூர்யகுமார் யாதவ் 11 ரன்களிலும், அடுத்து ஸ்ரேயஸ் ஐயர் 10 ரன்களிலும் ஆட்டத்தை இழந்ததால் இந்திய அணி தொடக்கம் முதலே நிலையில்லாமல் இருந்தது. தொடர்ந்து விளையாடிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜடேஜா 27 ரன்களில் வெளியேறினார். இதனால், இந்திய அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் எடுத்தது. 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி இலக்கை தொட்டது. வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரான்டன் கிங் 68 ரன்களும், டேவன் தாமஸ் 31 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். கேப்டன் நிகோலஸ் பூரன் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முட்டுக்கட்டையிட்ட ஓபெட் மெக்காய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்த டி20 தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. முதலாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதல் 3 ஆட்டங்கள் மேற்கிந்தியத் தீவுகளிலும், கடைசி இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடக்கவுள்ளன. 3ஆவது டி20 ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 3 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரை கைப்பற்றிய இந்தியா, டி20யிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.