காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரையிலான பாதயாத்திரை நாளை மாலை தொடங்குகிறார். இதற்காக இன்று மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் ராகுல் காந்தி நாளை காலை ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி பின்னர் கன்னியாகுமரிக்கு சென்று யாத்திரையை தொடங்கவுள்ளார். அங்கு ராகுலின் நடைப்பயணத்தை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தொடங்கி வைக்கவுள்ளார். தமிழகத்தில் மட்டும் மொத்தம் நான்கு நாள்கள் இந்த பாதயாத்திரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில், ”ராகுல் காந்தியே வருக; நாட்டுக்கு நல்லாட்சி தர உமது புரட்சிப் பயணம் வெல்க” எனக் கொடி அசைத்து முதலமைச்சர் ஸ்டாலின், ராகுலின் இந்த பயணத்தை தொடங்கி வைக்க இருக்கிறார் என்று திமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், காங்கிரஸ் கட்சியில் நேருக்கு பின்னரான இந்திரா காந்தியின் வாரிசு அரசியலை எதிர்த்த ”முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் ‘சோக்ரி’ (ஒன்றும் தெரியாத பெண்) என இந்திரா அம்மையாரை வர்ணித்தது போல், இன்று அவரின் பேரன் ராகுல் காந்தியும் பிரதமர் நரேந்திர மோடியால் பப்பு என வர்ணிக்கப்படுகிறார். அன்று சோக்ரியின் ஆட்டம் முடிந்த நிலையில் இன்று பப்புவின் ஆட்டம் தொடங்க இருக்கிறது” என்றும் முன்னர் இந்திரா காந்திக்கு, கருணாநிதி உதவியது போல் தற்போது ராகுலுக்கு மு.க.ஸ்டாலின் உதவ இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.