சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அதிமுக செய்தி தொடர்பாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீதிமன்றம் கூறிய பிறகும் பொதுக்குழுவை முறையாக நடத்தாமல் தீர்மானங்களை நிராகரித்துள்ளனர். நேற்று முன்னாள் அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டது என தெரிவித்துள்ளனர். கட்சியின் 43ஆவது விதி படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. அதன்படி இருவரும் முழு அதிகாரம் பெற்றவர்கள், அதை செல்லாது என சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டது அதற்கு பொதுக்குழு அங்கீகாரம் அளித்துள்ளது என்றால் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரின் பதவியும் காலாவதி ஆகிவிட்டது என்று தான் அர்த்தம். பதவி காலாவதி ஆகிவிட்டது என்றால் அவைத்தலைவரை எவ்வாறு ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தேர்வு செய்ய முடியும். பதவிகள் காலாவதியாகி விட்டது என்று முன்னாள் அமைச்சர் சண்முகம் கூறியது நாடகம். தேர்தல் ஆணையத்திடம் எந்த புகரும் தரவில்லை. கட்சியை நாங்கள் தான் வழி நடத்துவோம் பிறகு ஏன் நாங்கள் தேர்தல் ஆணையத்தை நாட வேண்டும் எனவும் கூறினார். அன்று ஆட்சியை காப்பாற்ற ஓபிஎஸ் வேண்டும். இன்று சர்வாதிகார போக்கில் கட்சியை கம்பனி போல் நடத்த முயற்சி செய்கின்றனர். நிச்சயம் இந்த கட்சியை நாங்கள் வழி நடத்துவோம். அன்றும் ஓ பன்னீர்செல்வம் தான் ஒருங்கிணைப்பாளர் இன்றும் என்றும் அவர் தான் ஒருங்கிணைப்பாளர். தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் தான் உள்ளார்கள். 1000 கணக்கான தொண்டர்கள் சென்னை வருவதாக தெரிவிக்கின்றனர். ஓ.பன்னீர்செல்வம் தான் அமைதியாக இருங்கள் என்று கூறியுள்ளார். 11ஆம் தேதி பொதுக்குழு என்பது கனவாகதான் இருக்கும் நனவாகாது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து போட்டால்தான் பொதுக்குழு நடக்கும். ஆனால் அவர்களே அதை அறிவித்து கொண்டால் அது செல்லாது. 11ஆம் தேதி பொதுக்குழு நிச்சயமாக நடைபெறாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் ஒன்றாகதான் மேடையில் அமர வைக்க வேண்டும். ஆனால் நாகரிகம் இல்லாமல் நடந்து கொண்டார்கள். அரசியல் நாகரிகம் இல்லாமல் நடந்து கொண்டார் சி.வி.சண்முகம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே தற்போது உள்ளது. மற்ற அனைத்து பதவியும் தற்போது காலாவதி ஆகிவிட்டது. ஒரு வருட காலமாக சசிகலா தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என்றுதான் சொல்லி கொண்டு இருக்கிறார். அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. யார் வேண்டுமானாலும் சுற்றுப்பயணம் செய்ய உரிமை உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் இனிமேல் துணிந்து செயல்பட உள்ளார். கட்சியை நாங்கள் வழிநடத்தி செல்லுவோம். இன்னும் ஒரு மாதத்தில் நாங்கள் கட்சியை வழி நடத்துவோம்.