ஆப்கானிஸ்தான் நாட்டின், பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரில் சுமார் 44 கிலோ மீட்டர் (27மைல்) தொலைவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோளில் 6.1ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் அந்த நாட்டைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேலான மக்கள் உயிரிழந்து இருப்பதாகவும், சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இத்துடன் நிலநடுக்கத்தால் 1000க்கும் அதிமான வீடுகள் சேதமடைந்துள்ளன. எனவே மீட்பு மற்றும் மருத்துவ உதவிகளை ஆப்கான் அரசு முடுக்கிவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தில் இறந்தவர்களுக்கு இந்தியா சார்பில் இரங்கல் தெரிவிப்பதாகவும், ஆப்கான் மக்களின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு தேவையான உதவி, ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் உறுதிக்கூறியுள்ளார்.