சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரிக்கு நீர்வரத்து 2,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. எனவே, புழல் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 3 மணியளவில் 100 கனஅடி உபரிநீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உபரிநீர் கால்வாய் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல், 1,180 கன அடியாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு முதற்கட்டமாக 100 கனஅடி உபரிநீர் திறக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அடையாற்றில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் திறக்கப்படுகிறது.