மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான இன்று தன் 100வது டெஸ்ட் போட்டியில் ஆடும் டேவிட் வார்னர் இரட்டைச் சதமெடுத்து ஜோ ரூட் சாதனையை சமன் செய்தார். டெஸ்ட் வரலாற்றில் 100வது டெஸ்ட் போட்டியில் சதம் கண்ட 10வது வீரர் என்ற பெருமையை எட்டினார் டேவிட் வார்னர்.
சென்னையில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஜோ ரூட் 218 ரன்களை தன் 100வது டெஸ்ட் போட்டியில் எடுத்த சாதனையை வார்னர் இரட்டைச் சதம் மூலம் 100வது டெஸ்ட் இரட்டைச் சதம் என்ற சாதனையை சமன் செய்துள்ளார். 196 ரன்களில் இருந்த போது இங்கிடி பந்து ஒன்று கூடுதலாக எழும்ப வார்னரின் கட் ஷாட் எட்ஜ் ஆகி ஒரே ஸ்லிப்புக்கு வைடாகச் சென்று பவுண்டரி சென்றது, 100வது டெஸ்ட் போட்டியில் சதமெடுத்த முதல் ஆஸ்திரேலிய வீரர் ஆனார். மேலும் இந்த இரட்டைச் சதம் மூலம் பாகிஸ்தான் வீரர் இன்சமாம் 100வது டெஸ்ட் போட்டியில் எடுத்த 184 ரன்களையும் கடந்தார். வார்னரின் 3வது டெஸ்ட் இரட்டைச் சதம் ஆகும் இது.
தற்போது வார்னர் 254 பந்துகளில் 16 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 200 ரன்களுடன் ஆடிவருகிறார். ஸ்டீவ் ஸ்மித் 161 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 85 ரன்கள் எடுத்து நார்க்கியா பந்தை தேர்ட் மேனில் அப்பர் கட் அடிக்கும் முயற்சி தோல்வியடைய கல்லியில் டி புருய்னிடம் எளிதாக கேட்ச் ஆகி வெளியேறினார். இருவரும் சேர்ந்து சுமார் 56 ஓவர்களில் 239 ரன்களை 3வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் இதுவரை 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்துள்ளது.
பிரிஸ்பன் கிரீன் டாப்பில் தன்னை கபளீகரம் செய்த ஷார்ட் பிட்ச் எகிறு பந்தை இந்த முறை விடக்கூடாது என்று மாணிக்கமாக இருந்த வார்னர் மானிக் பாட்சாவாக மாறி புல் ஷாட், ஹூக் ஷாட் என்று பின்னிப் பெடலெடுத்து விட்டார். கட் ஷாட்களும் நேர் ட்ரைவ்களும், கண்கொள்ளாக் காட்சி. ஆனால் ஆன்ரிச் நார்க்கியா இவரை ஆட்டி விட்டார் ஆட்டி. ஒரு ஓவர் முழுதும் மணிக்கு 150 கிமீ தாண்டிய வேகம், ஒரு பந்து 155 கிமீ வேகம், வார்னர் விரல்களை பதம் பார்த்தது, ஒருமுறை ஹெல்மெட்டில் பட்டது.
வார்னரின் ஃபிட்னெஸ் பிரமாதம் என்பதற்கு சாட்சி 3 முறை 4 ரன்களை ஓடியே அவர் எடுத்தார். அதுவும் ரபாடாவை புல் ஷாட்டில் பவுண்டரி எடுத்து சதம் எடுத்தவுடன் அவர் முகத்தில் கண்ட மகிழ்ச்சி ஆஸ்திரேலிய ரசிகர்களின் மனங்களை பிரதிபலிக்கும் மகிழ்ச்சியாகும். 200 ரன்கள் எடுத்து சதைப்பிடிப்பு தீவிரமடைய அவர் பெவிலியன் சென்று விட்டார், கிரீன் இறங்கியுள்ளார் ட்ரவிஸ் ஹெட் இன்னொரு முனையில் ஆடிவருகிறார் ஆஸ்திரேலியா 330/3 என்று 141 ரன்கள் முன்னிலை வகிக்கின்றது.