நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை தொடங்கியது. பதவில் உள்ள குடியரசு தலைவரின் பதவி காலம் முடியும் முன்னரே நடத்தி முடிக்க வேண்டும். அதன்படி, இன்று நடக்கும் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வரும் 21ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவு அறிவிக்கப்படும். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராகவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியும், தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்து, வாக்குப்பதிவை தொடங்கி வைத்தனர்.