சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அஇஅதிமுகவின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் கடந்த 11ஆம் தேதி சில விரும்பத்தகாத அசம்பாவிதங்கள் நடந்தன. இதன் பிறகு வருவாய்த்துறை அதிகாரிகளால் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சீலை அகற்றுவது தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் இரு தரப்பு வாதங்களுடன் தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சதீஷ்குமார், கடந்த 20ஆம் தேதி “அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரியும், எடப்பாடி பழனிசாமி மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், ஒரு மாத காலத்துக்கு தொண்டர்களை தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது” என்றும் நீதிபதி கூறியுள்ளார். அதன்படி, நேற்று (ஜூலை மாதம் 21ஆம் தேதி) காலை மயிலாப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் போடப்பட்டிருந்த சீலை அகற்றி, சாவியை ஈபிஎஸ் தரப்பில் அங்கீகரிக்கப்பட்ட முகவரான பி.மகாலிங்கத்திடம் ஒப்படைத்தார். இதையடுத்து, 10 நாட்களாக பூட்டப்பட்டிருந்த கட்சி அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. மேலும், அசம்பாவிதங்களை தடுக்க அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, இன்று நீதிமன்ற உத்தரவை அடுத்து தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று அறிவிப்பு பலகை ஒன்று தலைமை கழக வாசலில் வைக்கப்பட்டுள்ளது. அதில், நீதிமன்ற ஆணைப்படி கழக தொண்டர்களும், ஆதரவாளர்களும் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை தலைமை கழகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.