சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஸ்டார் சின்னம் இடம்பெற்று பதிவிடப்பட்டு இன்று காலை 11 மணிக்கு அப்டேட் என்று எழுதப்பட்டு இருந்தது.
சூப்பர் ஸ்டாரின் புதிய திரைப்படம் பற்றிய அப்டேட் என்று புரிந்துகொண்ட நெட்டிசன்கள் நேற்று முதலே அதீத ஆர்வத்தில் அப்டேட்டுக்காக காத்திருந்தனர். முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார், ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது.
ஆனால், பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெறத் தவறியதையடுத்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை நெல்சன் இழக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த சலசலப்புக்கு நடுவில் இன்று காலை 11 மணிக்கு தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்துக்கு ‘ஜெயிலர்’ என்று பெயரிடப்பட்டு போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
அதில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் தலைவர்169 திரைப்படத்தின் பெயர் ‘ஜெயிலர்’ என்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதன்மூலம், நெல்சன் குறித்த சலசலப்பு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. எனினும், இந்த போஸ்டரில் ரத்தம் சொட்டச் சொட்ட அருவாள் ஒன்று தொடங்க விடப்பட்டுள்ளது. ஏற்கனவே சமீப காலமாக வெளியாகும் திரைப்படங்களில் வன்முறை அதிகமாக காட்டப்படுவதாக பேசப்பட்டு வரும் சூழலில் தற்போது ஜெயிலர் திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வன்முறையின் அடையாளமாக திரைப்படத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக திரைப்பட ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் வெளியான, ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எப்., சாணிக் காயிதம், பீஸ்ட், விக்ரம் போன்ற திரைப்படங்களில் வன்முறை தலைவிரித்தாடிய நிலையில் தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படமும் நிச்சயம் வன்முறை திரைப்படமாகவே இருக்கக்கூடும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும், முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை சிறுவர்களே அதிக ஆர்வத்துடன் காண வருவதால், கொரோனாவுக்கு பிறகு இருக்கத்துடன் இருக்கும் அவர்களுக்கு வன்முறை ரீதியான திரைப்படங்கள் இன்னும் அதிகமாக எதிர்மறை எண்ணங்களை கொடுக்கக்கூடும் என்று அச்சம் கொள்ளதான் வேண்டி இருக்கிறது.
கே.ஜி.எப்., திரைப்படத்தின் நாயகர் ராக்கி, வயலன்ஸ்.. வயலன்ஸ்… வயலன்ஸ்… நான் விரும்பவில்லை என்றாலும், வயலன்ஸ் என்னை விரும்புகிறது என்று திரைப்படத்தில் கூறுவதுபோல, நாம் விரும்பவில்லை என்றாலும் வயலன்சை நம் மீது திணிக்கிறார்களே என்று எண்ணத்தோன்றுகிறது.
இத்துடன் ட்ரென் செட்டிங் ஒவ்வொரு காலநிலையிலும் மாறிக்கொண்டே இருக்கிறது. குடும்ப பின்னணி, இறை நம்பிக்கை, பேய் திரைப்பட ஜானர்களைப்போல தற்போது வயலன்ஸ் திரைக்கதைகள் ட்ரெண்டாகி வருகிறதுபோல…