நடிகர் கமல், இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ‘விக்ரம்’. படத்தில் கமலுடன், நடிகர்கள் சூர்யா, விஜய்சேதுபதி, பகத்பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன்தாஸ் ஆகியோர் உடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படத்துக்கு அனிரூத் ரவிசந்திரன் இசையமைத்துள்ளார். 1986ஆம் ஆண்டு ‘விக்ரம்’ என்ற பெயரில் திரைப்படம் ஒன்றில் நடித்த கமல் இப்போது, மீண்டும் அதே டைட்டிலில் மீண்டும் நடித்து இருக்கிறார். மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் கமலின் படம் என்பதாலும், வித்தியாசமான கதைக்களம் காரணமாகவும் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துள்ளனர். இந்த நிலையில் விக்ரம் வெளியாகி ஒரு மாதத்துக்கும் மேலாகியுள்ள நிலையில், அறிவித்தப்படி இன்று (ஜூலை 8ஆம் தேதி) நள்ளிரவு ஓடிடி தளத்தில் வெளியானது. முன்னதாக திரையரங்குகளில் விக்ரம் வெற்றிகரமாக பயணித்துக்கொண்டு இருக்கும் சூழலில் ஓடிடியில் வெளியிடப்பட்டதால் கமல் ரசிகர்கள் மனகசப்பில் உள்ளதாக தெரிகிறது. திரைப்படத்தை திரையரங்குகளில் பல முறை காணும் பழக்கம் பல சினிமா ரசிகர்களுக்கு உண்டு. அவர்களுக்கு திரையரங்கம் கொடுக்கும் அனுபவம் அலாதியானதாக இருப்பதாக தெரிவிப்பதுண்டு. இந்த நிலையில், ஏற்கனவே திரையரங்குகளில் வெற்றிகரமாக திரைப்படங்கள் ஓடிக்கொண்டு இருந்தாலும், படம் வெளியான ஒருசில மாதங்களுக்குள் ஓடிடியிலும், தொலைக்காட்சிகளும் வெளியாவதால் திரையரங்கங்களுக்கு சென்று திரைப்படம் பார்க்கும் அனுபவம் கிடைக்காமல் போவதாக சினிமா ரசிகர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், விக்ரம் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது. எது எப்படியோ, இனி கமலின் ரசிகர்கள் தினம் தினம் ஆண்டவரை வீட்டிலேயே சந்திக்கலாம் போல…