இந்தியாவின் குடியரசு துணைத் தலைவரான வெங்கய்யா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளதால் அடுத்த குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கடந்த 5ஆம் தேதி முதல் நேற்றுவரை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க ஆளுநரான ஜெகதீப் தங்கர் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், கடைசி நாளான நேற்று எதிர்கட்சிகளின் சார்பில் போட்டியிடும், முன்னாள் மத்திய அமைச்சரும் கோவா, ராஜஸ்தான், குஜராத், உத்தர்காண்ட் மாநில ஆளுநராக இருந்தவருமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மார்கரெட் ஆல்வா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, இவர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஜூலை 20ஆம் தேதி) நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெற ஜூலை 22ஆம் தேதி கடைசிநாள் ஆகும். இதனையடுத்து, ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.