இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவரான வெங்கய்யா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளதால் அடுத்த குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தலை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானது. அதன்படி, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஜூலை 19ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாளாகும். இதையடுத்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூலை 20ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெற ஜூலை 22ஆம் தேதி கடைசிநாள் ஆகும். இதனையடுத்து, ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக ஜூலை மாதம் 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக திரெளபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பாக யஷ்வந்த் சின்ஹாவும் பேட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.