ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞரை பிடிக்க ராணிப்பேட்டை வட்ட ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் தனிப்படை நடத்திய தேடுதல் வேட்டையில், ஆற்காடு பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் (24) என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். அதேபோல், ராணிப்பேட்டை நகரத்தில் பல இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஜய் (எ) ஆத்து விஜய் (25) என்பவரை ராணிப்பேட்டை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அரக்கோணம் கிராமிய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பல இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அரக்கோணம் சாலை பகுதியைச் சேர்ந்த முருகன் (20) என்பவரை அரக்கோணம் கிராமிய காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து இந்த மூன்று குற்றவாளிகளுக்கும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் பரிந்துரை பேரிலும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்படியும் வேலூர் மத்திய சிறையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டனர்.