வேலூர் மாவட்டம், வேலூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் கார்த்தியாயினி செய்தியாளர்களுக்கு அளித்தப்பேட்டியில், ‘மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று எட்டு ஆண்டுகள் நிறைவு பெற்று ஒன்பதாம் ஆண்டு தொடங்குகிறது. நாடு முழுவதும் பல்வேறு மக்கள் நல திட்டங்களை மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறிய வாக்குறுதிகளை ஒரு சதவிகிதம்கூட நிறைவேற்ற முடியவில்லை. கடந்த ஆட்சியின்போது, மதுவினால் அதிக விதவைகள் உள்ள மாநிலமாக உள்ளதாக கனிமொழி பேசினார். இப்போது, அது குறைந்துவிட்டதா என்ன? மதுக்கடைகளையும் மூடவில்லை. தமிழகத்தில் உள்ள திமுக அரசு எப்போதும் மத்திய அரசுடன் மோதல் போக்கை தான் கடைபிடித்து வருகிறது. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து தமிழக முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து அளித்து வருகிறது. தமிழக முதலமைச்சர் ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்ட விளைநிலங்களில் சென்று ஆய்வு செய்கிறார். இதுதான் திராவிட மாடலா? வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.300 கோடியை அதிமுக மற்றும் திமுக அரசுகள் மக்கள் நல திட்டங்களுக்காக பயன்படுத்தாததால் அந்த நிதி மத்திய அரசிடம் மீண்டும் சென்றுவிட்டது. இதனால், மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்பட்டு, பணிகளும் நடக்கவில்லை. இதற்கு, அதிகாரிகளும் காரணம் தான். வேலூரில், பிரதமர் விவசாயிகளுடன் கலந்துரையாடி காணொளி கூட்டத்தில் பிரதமர் பேசும்போது வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சத்தத்தை மியூட் செய்துவிட்டு பிரதமர் உரையை புறக்கணித்தார். இதனை, கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்தியுள்ளோம். புதிய பேருந்து நிலையத்தை திறக்க 20ஆம் தேதி வேலூர் வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எங்கள் எதிர்ப்பை காட்ட பாஜக சார்பில் கருப்பு கொடியை காட்டுவோம். புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகள் அனைத்தும் நியாயமான முறையில் டெண்டர் விட்டுதான் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி தங்களின் திட்டம் என ஏமாற்றுகிறார்கள் என்று அவர் கூறினார். இந்தபேட்டியின்போது நிர்வாகிகள் மாவட்டத்தலைவர் மனோகரன், பொதுச்செயலாளர் ஜெகன், பாபு, சரவணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.