வேலூர் மாவட்டம், பள்ளேரியை சேர்ந்தவர் விவசாயி ராஜா. ஐந்தாவது வகுப்பு வரையில் மட்டுமே படித்துள்ளார். எனினும், இவர் விவசாயத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில், பொதுவாக விதை வேர்கடலைக்காயை கையினால்தான் உரித்து கிராமங்களில் பயன்படுத்துவார்கள். 40 கிலோ கொண்ட மூட்டையை உரித்துத்தர ஒரு ஆளுக்கு ரூ.400 கூலியாகிறது. இரண்டு பேர் உரித்தால் தான் ஒரு நாளைக்கு ஒரு மூட்டை கடலைக்காய் உரிக்க முடியும். மேலும் கடலைக்காய் உரிக்க ஆட்களும் தற்போது கிடைப்பதில்லை. இதனால், இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக 2 ஏக்கருக்கு மேல் கடலைக்காய் விதைக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, எளிமையான முறையில் சுமார் ரூ.18 ஆயிரம் செலவில் வேர்க்கடலைக்காய் உரிக்கும் இயந்திரத்தை இவரே வடிவமைத்து தயாரித்துள்ளார். 30 நிமிடத்தில் 40 கிலோ கொண்ட வேர்க்கடலைக்காயை இது உரித்து தரும். கொட்டை தனியாகவும் தோல் தனியாகவும் நீக்கி தருகிறது. ஒரே நாளில் உடனடியாக வேர்கடலைக்காயை உரித்து அப்போதே கடலைக்காயை நிலத்தில் போடும் வகையில் இந்த இயந்திரம் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது. முன்னதாக இவர் வேர்க்கடலைக்காய் பறிக்கும் இயந்திரம், நடவு இயந்திரம் உள்ளிட்ட பல இயந்திரங்களை கண்டுபிடித்து, அந்த பகுதி விவசாயிகளுக்கும் அந்த இயந்திரங்களை பயன்படுத்த கற்றும் தருகிறார். ஐந்தாம் வகுப்பு படித்த சாதாரண விவசாயி பொறியியல் மாணவர்களுக்கு நிகராக வேளாண் கருவிகளை கண்டுபிடித்து சாதித்து வருகிறார். இவரது கண்டுபிடிப்பிற்கு விவசாயிகளிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.