வேலூர் மாவட்டம் வசந்தபுரத்தை சேர்ந்தவர் முன்னா. இவர் நேதாஜி மார்கெட்டில் காய்கறி மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவியை ஓல்டுடவுன் பகுதியை சேர்ந்த போஸ்டர் ஒட்டும் தொழில் செய்துவரும் மணிகண்டன் என்பவர் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோட்டை பெரியார் பூங்காவில் மரத்தடியில் மணிகண்டன் உறங்கிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த முன்னா, மணிகண்டன் தலை மீது கல்லை போட்டுள்ளார். இதனால், தலையில் பலத்தகாயம் அடைந்து அலறிய மணிகண்டனை அங்கு இருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் முன்னாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மணிகண்டன் நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து முன்னா மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.