வேலூர் மாவட்டம், வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் சிலை அருகில் உள்ள செல்போன் கடை ஒன்றில் இரண்டு நபர்கள் புதிதாக செல்போன் ஒன்றை வாங்க வந்துள்ளனர். கடை உரிமையாளர் அவர்களுக்கு செல்போனை விற்றுவிட்டு, பணத்தை வாங்கி எண்ணியபோது அது கள்ள ரூபாய் நோட்டுகள் என அறிந்துகொண்டுள்ளார். இதனை புரிந்துகொண்ட அந்த இரண்டு நபர்களும் கடையை விட்டு வேகமாக வெளியேறி, கள்ள ரூபாய் நோட்டுக்களை சாலையில் வீசிசென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு காவல்துறையினர் சாலையில் வீசப்பட்டிருந்த இரண்டாயிரம் மற்றும் 500 ரூபாய் அடங்கிய கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அதில் மொத்தம் ரூ.4 லட்சத்து 45 ஆயிரம் இருந்துள்ளது. காவலர்கள் மேற்கொண்ட ஆய்வில் அவை அனைத்தும் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.