வேலூர் மாவட்டம், அப்துல்லாபுரத்தில் ஆங்கிலேயர் காலத்திலிருந்து சிறிய விமான நிலையம் செயல்பட்டு வந்தது. மத்திய அரசின் விமான போக்குவரத்து துறை இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய உத்தரவிட்டு அதற்கான பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த நிலையில் விமான ஓடுதளத்திற்காக இன்னும் 11 ஏக்கர் விளை நிலத்தை கையகப்படுத்தினால் மட்டுமே விமான நிலைய விரிவாக்க பணிகளை தொடர முடியும் என்ற நிலை உள்ளது. இதனால், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் விமான நிலையத்தை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் விமான நிலைய விரிவாக்கம் குறித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வேலூர் விமான நிலைய விரிவாக்கம் பணிக்கு சுமார் 11 ஏக்கர் தனியார் நிலங்கள் விமான ஓடுதள பாதைக்காக கையகப்படுத்தப்படவுள்ளது. அந்த இடத்தை அதிகாரிகள் கண்டறிந்து அளவீடு செய்ய உத்தரவிட்டுள்ளோம். மேலும், விமான நிலையத்தின் உள்பகுதியில் உள்ள மின் கம்பங்களை அகற்றி வேறு இடத்தில் மாற்றி அமைக்க மின்வாரியத்திற்கு கூறியுள்ளோம். அதேபோல், குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் சுடுகாடுக்கும், மாற்று இடம் ஏற்பாடு செய்துள்ளோம். தற்போதுவரை, 80 சதவிகித விமான நிலைய விரிவாக்க பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை ஆகஸ்டு மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளோம். நிலம் கையகப்படுத்தவுள்ள 11 ஏக்கருக்கு இழப்பீடும் தர வேண்டி உள்ளது. இந்த பணிகளை ஆய்வு செய்து வரும் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் விமான நிலைய விரிவாக்கம் குறித்து மத்திய அரசின் விமான போக்குவரத்துறை கூட்டத்தில் எடுத்துரைப்போம்” என்று அவர் கூறினார்.