புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது கடந்த டிசம்பர் 26-ம் தேதி தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆனாலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த சம்பவத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேசியப் பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தாரிடம், அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து பிப்ரவரி 7-ம் தேதி கோரிக்கை மனு அளித்தார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை இரு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி. ஆகியோருக்கு கடந்த 8-ம் தேதி ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்து இளமுருகு முத்து கூறியபோது, “தேசியப் பட்டியலின ஆணையத்தினர் மார்ச் 4-ம் தேதி வேங்கைவயலுக்கு நேரில் வருவதாக உறுதி அளித்துள்ளதாக கூறியுள்ளனர்.