2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சங்கத் மோச்சான் கோவிலிலும், வாரணாசி கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திலும் என ஒரே நாளில் இரண்டு இடங்களில் குண்டு வெடிப்புகள் நடந்தது. கோவில் மற்றும் ரயில் நிலையம் போன்ற மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த இடத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 28 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வலியுல்லா கான் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டார். வங்காளதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் உல் ஜிகாத் என்ற அமைப்பைச் சேர்ந்த வலியுல்லா கான் மீது குண்டுவெடிப்புத் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த 16 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி வழக்கு விசாரணை முழுவதும் உத்தரபிரதேச மாநில காசியாபாத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறைவுப்பெற்ற நிலையில், வலியுல்லா கான் மீதான குற்றச்சாட்டு 2 வழக்குகளில் நிரூபிக்கப்பட்டதால் அந்த வழக்குகளில் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார். ஒரு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து, குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 2 வழக்கின் தண்டனை விவரங்களை நேற்று கூறிய மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜிதேந்திர குமார், வலியுல்லா கானுக்கு ஒரு வழக்கில் மரண தண்டனையும், மற்றொரு வழக்கில் ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
—