திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் இரு நிலைகளில் முதல் நிலையின் மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மற்றும் இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் என மொத்தம் நாள் ஒன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், இரண்டாவது நிலையில் உள்ள முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வல்லூர் அனல்மின் இணைப்பில் உள்ள 3 அலகுகளில் நாள் ஒன்றுக்கு தலா 500 வீதம் 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், அங்கு 3வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரு அனல் மின் நிலையங்களில் 1100, மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதனால் பழுதடைந்த கொதிகலன் குழாய்களை விரைந்து சீரமைக்கும் பணியில் மின் வாரிய பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.