வாஷிங்டன்: எலான் மஸ்க் கடந்த அக்டோபரில், உலகின் மிக பிரபல சமூக ஊடகமான டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரானார். தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளையும் மஸ்க் மேற்கொண்டார். நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் விரைவில் பல வருடங்களாக டுவீட் அல்லது டுவிட்டரில் உள்நுழைவு இல்லாத சுமார் 150 கோடி கணக்குகள் நீக்கப்படும் என்றும் கடந்த டிசம்பர் தொடக்கத்தில் டுவிட்டர் வழியே தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
இதுபற்றி பாக்ஸ் நியூஸ் வெளியிட்டு உள்ள செய்தியில், கொரோனா பெருந்தொற்றை பற்றி பல செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்கள், அதிலும் குறிப்பிடும்படியாக, அவை உயிரி ஆயுதம் ஆக உற்பத்தி செய்யப்பட்டு பரப்பப்பட்டது, சீனாவின் உகான் ஆராய்ச்சி மையத்தில் நடந்த ஆய்வு, சி.ஐ.ஏ.வுடன் கொரோனா வைரசுக்கு தொடர்பு இருப்பது போன்று தோன்றுகிறது என்பன போன்ற பல டுவிட்டர் செய்திகளை பரப்பி விட்ட அவர்களது கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டுவிட்டரில் ரஷியாவின் தலையீடு இருப்பது போன்ற சந்தேகங்களை தொடர்ந்து, அமெரிக்க அரசு நெருக்கடி அளித்துள்ளது என குளோபல் என்கேஜ்மெண்ட் மையம் தெரிவித்து, அதற்கான முடக்கப்பட்ட கணக்குகள் விவரங்களை பட்டியலிட்டு உள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் எலான் மஸ்கும் இதனை ஒப்பு கொண்டுள்ளார். அதன்படி, பத்திரிகையாளர்கள், கனடா நாட்டு அதிகாரிகள் உள்பட 2.5 லட்சம் பேரின் டுவிட்டர் கணக்குகள் அமெரிக்க அரசின் நெருக்கடியால் முடக்கம் செய்யப்பட்டன என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.