ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி நேற்று மாலை தைவான் தீவின் தலைநகர் தைபேவுக்கு சென்றுள்ளார். 1949ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போருக்கு பின் சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தாலும், சீன அரசின் கட்டுப்பாட்டிலேயே தைவான் செயல்பட்டு வருகிறது. எனினும், அமெரிக்கா தைவானுடன் அதிகாரப்பூர்வமற்ற உறவின் மூலம் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதைப் போல், அந்தத் தீவுக்கு எந்த நாட்டைச் சேர்ந்த தலைவா் சென்றாலும் அதற்கு சீனா தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, நான்சி பெலோசி, தைவானுக்குச் செல்வாா் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே அமெரிக்காவின் இந்த செயலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. அதன்படி, அவரது வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து தைவான் வான்பகுதியில் 20க்கும் மேற்பட்ட போா் விமானங்களை சீனா பறக்கவிட்டதாக தைவான் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தைவான் எல்லையையொட்டி பகுதிகளில் சீனா தனது ராணுவத் தளவாடங்களைக் குவித்து ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக தைவானை, சீனாவுடன் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம் என்றும் அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்கப்போவதில்லை என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறாா்.
இந்த நிலையில், நான்சி பெலோசி தைவானின் துடிப்பான ஜனநாயகத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதை உறுதிப்படுத்தவே இந்தப் பயணம் அமைந்துள்ளது’ என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி, ‘அமெரிக்காவின் துரோகத்தால் தைவானின் தேச நம்பகத்தன்மை திவால் நிலைக்கு சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் சில அமெரிக்க அரசியல்வாதிகள் நெருப்புடன் விளையாடுகிறாா்கள். இதன் மூலம் அமைதியை நாசம் செய்யும் அமெரிக்காவின் முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது’ என்று கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஐந்து முறை காணொலி காட்சி மூலம் பேசிய போது சீனா-தைவான் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் தலையிடுதல் கூடாது என்று கூறியிருந்த நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தின் உயா்நிலைத் தலைவா் ஒருவா் தைவானுக்கு முதல் முறையாக சென்றுள்ளது உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது.