ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே இன்று நாரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அபே அடையாளம் தெரியாத நபரால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். கீழே விழும்பொழுது துப்பாக்கி குண்டு வெடித்த ஓசை கேட்டதாகவும், அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் அந்த நாட்டின் செய்தி நிறுவன செய்தியாளர் ஒருவர் கூறியதாக செய்தி நிறுவனங்களில் தகவல் வெளியானது. இதனையடுத்து, துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அபே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அபே குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அபே உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டு இருந்தது. இந்த செய்திகள் பரவ தொடங்கிய நிலையில், பின்னால் இருந்து சுடப்பட்டதால் சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அனைத்து உறுப்புகளும் செயலிழந்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், அவருக்கு திடீரென மாரடைப்பும் ஏற்பட்டதால் உயிரிந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அபே உடல்நிலை குறித்து நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக ஜப்பானின் தற்போதைய பிரதமர் ஃபுமியோ கிஷிடா, பேசியுள்ளார். அதில், ஷின்ஷோ அபேயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இந்த சம்பவம் மன்னிக்கக்கூடிய செயல் அல்ல என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஷின்ஷோ அபே மீதான தாக்குதலுக்கு உலக அளவில் கண்டனங்களும், பிரார்த்தனைகளும் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி, தாக்குதல் சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இத்துடன், அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும், எனது நினைவுகள் அவரது குடுப்பத்தினர் மற்றும் நாட்டு மக்களுடன் இருப்பதாகவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.