புதுடெல்லி : ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்பட்டு நாளையுடன் ஒராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில் அமைதியை உறுதி செய்து உக்ரைனின் சுதந்திரத்தை காக்க தீர்மானம் ஒன்று ஐ.நா பொதுச் சபையில் இன்று கொண்டு வரப்படுகிறது. ரஷ்யாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா.வின் வாக்கெடுப்புகளில் பங்கு கொள்ளாமல் இந்தியா விலகியிருந்தது. இந்நிலையில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என இந்தியாவிடம் உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அலுவலகத்தின் தலைவர் ஆன்ட்ரி யெர்மாக் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஐ.நா பொதுச் சபையில் இன்று நடைபெறும் ஓட்டெடுப்பில் உக்ரைனுக்கு தென் பகுதியில் உள்ள நாடுகளின் ஆதரவு தேவை. ரஷ்யாவின் நிலப்பகுதியை நாங்கள் ஒரு செ.மீ கூட உரிமை கொண்டாடவில்லை. நாங்கள் போராடும் அதே நேரத்தில், 10 அம்ச அமைதி திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இந்த வரைவு தீர்மானத்தில் போரை முடிவுக்கு கொண்டு வரும் எந்த வாய்ப்பையும் உக்ரைன் வரவேற்கிறது. உக்ரைன் எல்லையிலிருந்து ரஷ்ய படைகள் முழுவதும் வெளியேற வேண்டும் என கூறியுள்ளார்.