ராஜஸ்தான் மாநிலம் பர்மார் மாவட்டம் உதர்லாய் விமான தளத்தில் இருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்-21 ஜெட் ரக போர் விமானத்தை, விமானிகள் நேற்று மாலை (ஜூலை மாதம் 28ஆம் தேதி) பயிற்சிக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, இரவு 9.10 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் பார்மர் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பதிவில், ”விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானப்படை வீரர்களை இழந்தது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தேசத்திற்கான அவர்களின் சேவையை ஒருபோதும் மறக்க முடியாது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் இறந்த விமானிகளின் குடும்பங்களைச் சார்ந்தே உள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.