நம்ப தகுந்த சமூக ஊடங்களில் ஒன்றாக டிவிட்டர் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பொதுவாக பிரபலமான நபர்கள், புகழ்பெற்றவர்கள் உள்ளிட்டோரின் அதிகார கணக்கு என்பதை உறுதி செய்யும் வகையில் ட்விட்டர் பக்கம் அவர்களுக்கு ப்ளூ டிக் கொடுக்கிறது. இந்த ப்ளூ டிக் ட்விட்டர் கணக்கு வைத்திருப்போரிடம் ஏற்கனவே மாதம் ரூ.400 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனி மாதந்தோறும் 20 அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,600 வசூலிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி விமசனத்துக்குள்ளானது. இதையடுத்து, டிவிட்டரில் ப்ளூ டிக் பயனாளர்கள் மாதந்தோறும் 8 அமெரிக்க டாலரை (ரூ.660) கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மஸ்கின் இந்த அறிவிப்பு குறித்து தொடர்ந்து பயன்பாட்டாளர்கள் கருத்து கூறி வரும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 4,800 ரூபாய் கொடுத்து சட்டை வாங்குவதாகவும், 660 ரூபாய் கொடுத்து ப்ளூ டிக் பெற்று கொள்ள விருப்பமில்லையா என்பதை குறிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அதேபோல், 30 நிமிடங்களில் காலியாகும் குளிர்பானத்திற்கு 660 ரூபாய் செலவு செய்வதற்கு சிரிப்பது போன்றும், ப்ளூ டிக்கிற்கு 660 ரூபாய் செலவு செய்ய கஷ்டமாக இருப்பதாகவும் பொம்மை வைத்து எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.