புதுச்சேரி: உலக சுகாதார நிறுவனம் 2030-க்குள் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. மத்திய அரசு 2025-க்குள் காசநோயை ஒழிக்க வேண்டும் என இலக்கு முன்வைத்து அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. புதுவை அரசின் சுகாதாரத்துறை, தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் காசநோய் ஒழிப்புக்காக வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்ய உள்ளனர். இந்த பரிசோதனை திட்டத்தின் தொடக்கவிழா மேட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார். கவர்னர் தமிழிசை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் நடமாடும் எக்ஸ்ரே எந்திரம் மூலம் வீடு, வீடாக பரிசோதனை செய்ய உள்ளனர். மரபியல் மூலம் சளி பரிசோதனையும் செய்யப்படும். இந்த பரிசோதனைகள் மூலம் காசநோயாளிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்கள் பாதிக்கப்படாமல் தடுக்கலாம். முதல்கட்டமாக 60 சதவீத மக்களை இந்த ஆய்வுக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2-ம் கட்ட பரிசோதனையில் எஞ்சியவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும்.
கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது : கொரோனா தொற்று பரவல் காரணமாக காசநோய் உள்ளிட்ட பிற நோய்களின் மீது கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. தற்போது மத்திய அரசு பிற நோய்களின் மீது மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. பிரதமர் மோடி காசநோய்க்காக தனி இணையதளம் தொடங்கியுள்ளார். காசநோயாளிகள் 100 பேரை நானும் தத்தெடுத்துள்ளேன். ஏற்கனவே புதுவை மாநிலம் காசநோய் பாதிப்பை குறைத்ததற்காக மத்திய அரசிடம் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளது. மேலும் தீவிர முயற்சியெடுத்து தங்க பதக்கம் பெற திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்த்ள்ளார்.