புதுடெல்லி: திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் மார்ச் மாதம் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த 3 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
திரிபுராவில் பிப்.16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் பிப்.27-ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறும். தேர்தல் முடிவுகள் மார்ச் 2-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிப்.16-ல் தேர்தல் நடக்க உள்ள திரிபுராவில் வேட்புமனு தாக்கல் வரும் 21-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைகிறது. 31-ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. மனுவை வாபஸ் பெற பிப்.2-ம் தேதி கடைசி நாள்.
அதேபோல, பிப்.27-ம் தேதி தேர்தல் நடக்க உள்ள மேகாலயா, நாகாலாந்தில் வேட்புமனு தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி பிப்.7-ம் தேதி முடிவடைகிறது. பிப்.8-ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற பிப்.10-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3 வடகிழக்கு மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக மொத்தம் 9,125 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைக்கிறது. இது கடந்த 2018-ம் ஆண்டில் அமைக்கப்பட்டதைவிட 634 அதிகம். 73 சதவீத வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா வசதிகள் செய்யப்படுகின்றன. 376 மையங்களை முழுமையாக பெண் அதிகாரிகளே நிர்வகிப்பார்கள். வாக்குச்சாவடிகளில் குடிநீர், மின்சாரம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை நிரந்தரமாக செய்து தருமாறு மாநில அரசுகளை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வசதிகள் பள்ளிகளுக்கு நிரந்தர பரிசுகளாக இருக்கட்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.