44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாயிண்ட் நட்சத்திர விடுதி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மிகப் பெரிய அரங்கில் நடைபெறுகிறது. தமிழக அரசு நடத்தும் இந்த போட்டியை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். நேற்று முதல் தொடங்கிய போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 187 நாடுகளைச் சேர்ந்த இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், ஓபன் பிரிவில் 188 அணிகளாகவும், பெண்கள் பிரிவில் 162 அணிகளாகவும் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில் இரு பிரிவுகளிலும் தலா மூன்று அணிகள் பங்கேற்றுள்ளன. இதில், நேற்றைய முதல் நாள் போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டியிட்ட 3 இந்திய அணிகளும் வெற்றிப்பெற்றன. இதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது சுற்று போட்டிகள் மாலை 3 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.