தமிழகத்தில், 2022-23ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்புகளில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. அதேபோல, பெண்களுக்கான செவிலியர் பட்டயப் படிப்பு, மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org இணையதங்கள் வழியாக விண்ணப்பப் பதிவு மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிக்க, இன்று கடைசி நாளாகும். இதுவரை, 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்த நிலையில், ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்ததுடன், ஆவணங்கள் சமர்ப்பிக்காமலும், கட்டணம் செலுத்தாமலும் இருப்பவர்கள், இன்றுடன் இது தொடர்பான அனைத்து பணிகளையும் முடிக்க மருத்துவ கல்வி இயக்ககம் கேட்டுக்கொண்டுள்ளது.