2022ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் முன்னதாக, மே மாதம் 7ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில், ராணுவ மருத்துவ நிறுவனங்களில் நடத்தப்படும் பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கும், நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி, மே மாதம் 20ஆம் தேதி வரை அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. அதன்படி மே மாதம் 20ஆம் தேதி இரவு 9 மணி வரை இந்தியா முழுவதிலிருந்தும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் நீர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களின் விண்ணப்பத்தில் திருந்தங்கள் ஏதும் செய்ய விரும்பினால் அதை இன்று இரவுக்குள் https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் திருத்திக்கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.