சென்னை, மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி கிராமத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக தளத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் ஜூலை 27ஆம் தேதி தொடங்கி வரும் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு பொதுபிரிவில் 189 அணிகளும் பெண்கள் பிரிவில் 154 அணிகளும் என மொத்தமாக 187 நாடுகளில் இருந்து பதிவு செய்தனர். ஏறக்குறைய 1500-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை ஒருங்கிணைந்து நடத்துவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில், 7 சுற்றுகள் இதுவரை சிறப்பாக முடிந்துள்ள நிலையில், இன்று 8வது சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில், ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா சார்பில் மொத்தம் 6 அணிகளை களம் காணுகிறது. இன்று பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ள 8ஆவது சுற்றில் இந்தியா A அணி அர்மேனியா அணியையும், இந்தியா B அணி அமெரிக்கா அணியையும், இந்தியா C அணி பெரு அணியையும் எதிர்கொள்கிறது. மகளிர் பிரிவில் இந்தியா A அணி உக்ரைன் அணியையும், இந்தியா B அணி குரோஷிய அணியையும், இந்தியா C அணி போலந்து அணியையும் எதிர்கொள்கின்றன.