தமிழகம் முழுவதும் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடியவிடிய பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணனும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதாவும் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுமுறை அறிவித்துள்ளார். சென்னையில் மழை நீர் பல்வேறு முக்கிய சாலைகளில் தேங்கியுள்ளது. இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.