இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 20 ஆயிரத்து 044 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 30 ஆயிரத்து 068 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்து 760 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் நேற்று மட்டும் 56 பேர் மரணடைந்துள்ளனர். இதனையடுத்து, இதுவரை கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 660 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 18 ஆயிரத்து 301 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 63 ஆயிரத்து 651 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 1,99,71,61,438 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், நேற்று மட்டும் 22,93,627 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, நேற்று மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள 18 முதல் 59 வயது வரையிலான அனைவருக்கும் இலவச கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, நேற்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.