திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பானதாகும். கொரோனாவால் கடந்த 2 ஆண்டாக கார்த்திகை தீபத்திருவிழா கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது. சாமி உலா, தேரோட்டம் ஆகியவை கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்று வந்தது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவ.27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும். டிச.6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவிலில் சாமி சன்னதியில் கருவறைக்கு முன்பகுதியில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீபமும், மாலை 6 மணியளவில் கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபத்தை காண தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவுசெய்து உள்ளது.