திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அங்கநாத வலசை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் ஜவ்வாதுமலை புதூர் நாடு மலைப்பகுதியில் டிராக்டரில் நிலத்தை உழுது விட்டு திரும்பவும் வீடு திரும்பியுள்ளார். அப்போது சித்தூர் பகுதியை சேர்ந்த மணி, தன்னை புதூர் நாடு பகுதியில் இறக்கி விடுமாறு டிராக்டரில் ஏறி உள்ளார். இந்த நிலையில் சித்தூர் கூட்ரோடு பகுதியில் டிராக்டர் வந்து கொண்டிருந்தபோது டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து பக்கத்தில் உள்ள 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. டிராக்டரின் உரிமையாளர் கோவிந்தசாமி மற்றும் லிப்ட் கேட்டு வந்த மணி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பின்பு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் இருவரின் சடலத்தையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதேபோல் புதூர்நாடு மலைப்பகுதியில் கோவிலுக்குச் சென்ற பிக்கப் வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.