தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள சக்திவேல் திரையரங்கில் நான்கு காட்சிகளும் விக்ரம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை 6.30 மணி காட்சி தொடங்கிய சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒலிபெருக்கி வேலை செய்யாததால் வசனங்களை ரசிகர்களால் கேட்க முடியவில்லை. ஆத்திரமடைந்த ரசிகர்கள் கூச்சலிட்டதால் சிறிது நேரம் காட்சி நிறுத்தப்பட்டு பழுதான ஒலிபெருக்கியை சீரமைக்கும் பணியில் திரையரங்கு ஊழியர்கள் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆகியும் அவர்களது முயற்சி பலன் அளிக்காததால் காட்சி ரத்து செய்யப்பட்டன. இதனால், ஏமாற்றமடைந்த ரசிகர்கள் டிக்கெட்டுக்கான கட்டணத்தை திரும்பத் தருமாறு திரையரங்கு முன்பு குவிந்தனர். வேறு வழியின்றி திரையரங்க நிர்வாகம் டிக்கெட் கட்டணத்தை ரசிகர்களிடம் திரும்ப கொடுத்தது. இது குறித்து ரசிகர்கள் கூறுகையில், முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் டிக்கெட் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தும் திரையரங்கு உரிமையாளர்கள், திரையரங்கை முறையாக பராமரிப்பதில் கவனம் செலுத்துவதில்லை எனவும் குற்றஞ்சாட்டினர்.