திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியை சேர்ந்த ஐஸ் வியாபாரி செல்வராஜின் மகள் நந்தினி (27). இவர் பேரணாம்பட்டு, பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளியான விக்னேஷ் என்பவரை காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் சில மாதங்களாகவே கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நந்தினி, ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியில் நடைபெற்று வரும் கெங்கையம்மன் கோயில் திருவிழாவிற்காக குடும்பத்துடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்தநிலையில், வழக்கம்போல் நேற்று இரவு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் மனைவியை விக்னேஷ் துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பியோட முயன்றுள்ளார். இதனையடுத்து, தகவலறிந்து வந்த உமராபாத் காவலர்கள் விக்னேஷ்-ஐ கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறில் மனைவியை துப்பட்டாவால் இறுக்கி கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.