திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட புதூர் லுத்ரன் சென்டர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மலர்க்கொடி மற்றும் பொற்கொடி. இவர்கள் இருவரும் இணைந்து தங்களுடைய மனையில் வாணியம்பாடி நகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் கட்டடம் ஒன்றை கட்டி முடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, கட்டடத்திற்கு மின் இணைப்பு பெற வேண்டும் என்பதற்காக, ஏற்கனவே சொத்துவரி செலுத்தியது போன்ற போலி ஆவணமும், கட்டடம் தொடர்பான ஆட்சேபனை ஏதும் இல்லை என நகராட்சி ஆணையர் வழங்கியது போல மற்றொரு போலியான ஆவணத்தையும் தயாரித்து மின் இணைப்பு பெற்றுள்ளர். இந்தநிலையில், போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் வாணியம்பாடி நகர ஆணையாளர் ஸ்டான்லி பாபு ஆய்வு நடத்தினார். இதனையடுத்து, புகாரின் பேரில் முகாந்திரம் இருப்பதால், நகர ஆணையாளர் சார்பில், சம்பந்தப்பட்ட மனையின் உரிமையாளர்கள் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே வாணியம்பாடி நகர காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.