திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், தற்போது வரை சென்றுகொண்டிருக்கும் வெள்ளத்தில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் குளிக்க சென்றுள்ளனர். சிறுவர்கள் பாலாற்றில் குளித்து கொண்டிருந்தபோது கால்களில் ஏதோ தென்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் நீரில் மூழ்கி பார்த்த போது பழங்கால கற்சிலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. பெருமாள் மற்றும் அதனுடன் 2 அம்மன் சிலைகளை சிறுவர்கள் கண்டெடுத்துள்ளனர். உடனடியாக சிலைகள் குறித்து வாணியம்பாடி வருவாய் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் வளர்மதி கிராம உதவியாளர் பரந்தாமன் ஆகியோர் அந்த 3 சிலைகளை மீட்டு வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த சிலைகள் ஆங்காங்கே சிதிலமடைந்து இருந்துள்ளது. எனவே இவை பழங்கால சிலைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் அங்குள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணன் கோவிலில் உள்ள தூண்களில் 9ஆம் நூற்றாண்டு சோழர்கள் கால எழுத்துகளை கண்டறிந்தனர். பின்னர் தொல்லியல் ஆய்வாளர்கள் அந்த எழுத்துகளை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் அதே கிராமத்தில் உள்ள பாலாற்றில் பழங்கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வாணியம்பாடி சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்யவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.