தமிழ், தெலுங்கு, இந்தியில் கிட்டதட்ட 20 ஆண்டுகளாக நடித்து வருபவர் நடிகர் சித்தார்த். தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘மதுரை விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேல் எங்களை பாதுகாப்புப் படை வீரர்கள் துன்புறுத்தினார்கள். என்னுடைய வயதான பெற்றோரின் பைகளில் இருந்து காயின்களை எடுக்கும்படி சொன்னார்கள். நாங்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டுகோள் விடுத்தபோதும் தொடர்ந்து அவர்கள் இந்தியிலேயே எங்களிடம் உரையாடினார்கள். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது இப்படித்தான் இந்தியாவில் இருக்கிறது என்ற நிலையையும் எங்களுக்கு உணர்த்தினார்கள். வேலையில்லாத மக்கள் தங்களின் அதிகாரத்தை காட்டுகிறார்கள்’’ என்று சித்தார்த் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். சித்தார்த்தின் இந்தப் பதிவு இணையத்தில் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.